பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் ' சொர்க்க வனம் ' என்ற ஒரு காடு இருந்தது. அங்கே ஆயிரக்கணக்கான பறவைகளும் மிருகங்களும் ஒன்று கூடி மகிழ்ச்சியாக வாழ்ந்தன. அந்த அமைதியைக் கெடுப்பது போல், பருந்தும் வௌவாலும் மட்டும் இரவு பகல் என்று பார்க்காமல் சண்டை போட்டுக் கொண்டிருந்தன. இதனால் மற்ற விலங்குகளின் அமைதி கெட்டது.
இதற்கு ஒரு முடிவு காண எல்லா விலங்குகளும் எண்ணின.
எல்லாப் பறவைகளும் அறிவும் அனுபவமும் நிறைந்த ஆந்தையை அழைத்து ஆலோசனை கேட்டன. ஆந்தை மற்றப் பறவைகளிடம்,
"
எனக்கு ஒரு யோசனை தோன்றுகிறது. பருந்துக்கும் வௌவாலுக்கும் ஒரு போட்டி வைப்போம். இதில் எது தோற்றுப் போகிறதோ அதை இந்தக் காட்டைவிட்டு அனுப்பி விடுவோம், " என்று கூறியது.
இதைக் கேட்டதும் எல்லா மிருகங்களும், "ஆஹா! நல்ல யோசனை. அப்படியே செய்வோம்," என்று ஆரவாரம் செய்தன.
மறுநாள் அதிகாலையில் மீண்டும் எல்லா விலங்குகளும் கூடின. அங்கே பருந்தும் வௌவாலும் ஒன்றை ஒன்று முறைத்துப் பார்த்துக் கொண்டு நின்றுகொண்டிருந்தன.
ஆந்தை பேச ஆரம்பித்தது. " இந்த வனத்தில் நீங்கள் இருவரும் இருக்க வேண்டுமானால் ஒற்றுமையுடன் வாழக் கற்றுக்கொள்ள வேண்டும்.......... ," என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே வௌவால் குறுக்கே பேச ஆரம்பித்தது.
"முடியாது! பருந்து மிகுந்த கர்வம் கொண்டது. அது அதிக உயரம் பறக்கும் திறமை கொண்டது என்று எண்ணிக் கொண்டு, வீண் பெருமை பேசித் திரிகிறது. நான் அதைவிடப் பலசாலி என்பதை அது ஒத்துக் கொண்டால்தான் எங்களுக்குள் உள்ள பகைமை தீரும்," என்றது. " அது ஒரு போதும் நடக்கவே நடக்காது," என்று கடுங்கோபத்துடன் பதில் கூறியது பருந்து.
இறுதியில், ஒரு போட்டி நடத்தி பலசாலியைக் கண்டுபிடிக்கலாம் என்று ஒருமனதுடன் எல்லா மிருகங்களும் முடிவெடுத்தன. உடனே பருந்து அசுர வேகத்தில் மேல் நோக்கிப் பறக்க ஆரம்பித்தது. வௌவாலும் பருந்துக்கு இணையாகப் பறந்தது. நேரம் ஆக ஆக வௌவால் சோர்வடையத் தொடங்கியது.
"அடே! அப்பா! பருந்தால் எவ்வளவு உயரம் பறக்க முடிகிறது!" என்று எல்லா மிருகங்களும் ஆச்சரியப்பட்டன.
வௌவால் தொடர்ந்து பறக்க முடியாமல் தோல்வியை ஒப்புக்கொண்டது. பருந்துதான் மிகுந்த பலசாலி என்று ஒப்புக்கொண்டது. வெட்கம் அடைந்த வௌவால் அருகில் இருந்த ஒரு குகைக்குள் பறந்து மறைந்தது.
அன்று முதல் இன்று வரை வௌவால் பகலில் வெளியே வருவதே இல்லை. இரவில் மட்டும் உணவு தேட குகையிலிருந்து வெளியே வரும். பொழுது விடியும் சமயம் மீண்டும் தன் குகைக்குள் சென்று மறைந்து கொள்ளும். ஆணவம் அறிவைக் கெடுக்கும் என்று வௌவால் நன்கு புரிந்துகொண்டது. |